போர் மற்றும் அவசரநிலை காலங்களில் வெளிநாட்டு உபகரணங்களை நம்பி இருக்கும் சூழலைக் குறைக்கும் வகையில் உள்நாட்டில் நவீன பாராசூட் உருவாக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…
மிலிட்டரி காம்பட் பாராசூட் சிஸ்டம் எனப்படும் இந்திய பாராசூட் அமைப்பு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்மூலம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 32,000 அடி உயரத்தில் இருந்து நடைபெற்ற போர்முறை Free Fall சோதனையில் இந்த அமைப்பு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்திய விமானப்படை வீரர்கள் இந்தச் சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர். மிலிட்டரி காம்பட் பாராசூட் சிஸ்டம் அமைப்பின் வலுவான இந்தத் திறன், இந்திய விமானப் படையின் நம்பகத்தன்மை மற்றும் மேம்பட்ட வடிவமைப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறது.
தற்போது வரை 25,000 அடி உயரத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடிய திறனுடன் ஒரே பாராசூட் அமைப்பாக மிலிட்டரி காம்பட் பாராசூட் சிஸ்டம் இந்திய ஆயுதப்படைகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்தப் பாராசூட் அமைப்பு, ஆக்ராவில் அமைந்துள்ள Aerial Delivery Research and Development Establishment மற்றும் பெங்களூருவில் உள்ள Defence Bioengineering and Electromedical Laboratoryஆகிய DRDO ஆய்வகங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.
மிலிட்டரி காம்பட் பாராசூட் சிஸ்டம் அமைப்பு, மிதமான வேகத்துடன் இறங்கும் திறன் மற்றும் மேம்பட்ட திசை மாற்றும் திறனைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பாரா ட்ரூப்பர்கள் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறலாம்.
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட உயரத்தில் பாராசூட்டை திறந்து, துல்லியமாக வழிநடத்தி, குறிக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்பாகத் தரையிறங்க முடியும். மேலும், இந்த அமைப்பு Navigation with Indian Constellation தொழில்நுட்பத்துடன் நெருக்கமாக உள்ளது. இதனால், எந்தவொரு வெளிநாட்டு அமைப்பினையும் சார்ந்திராமல், தேவைக்கேற்ப சுயமாகப் பயன்படுத்தும் சுதந்திரத்தை உறுதி செய்கிறது.
இதுவே, வெளிநாடுகளின் தலையீடு அல்லது சேவை செய்ய விருப்பமில்லாதது போன்ற பிரச்சனைகளிலிருந்து நம் சுயதிறனை பாதுகாக்கும் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது. இனி இந்தியாவில் தயாரிக்கப்படும் பாராசூட் அமைப்புகளை, இந்திய ஆயுதப்படைகளில் சேர்ப்பதற்கான புதிய வாய்ப்புகளை இந்த வெற்றி உருவாக்கி இருக்கிறது. இது வெளி நாடுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும்.
அதிக பயன்பாட்டைப் பிரச்சினைகளின்றி உறுதிப்படுத்தும். போர் மற்றும் அவசரநிலை காலங்களில் வெளிநாட்டு உபகரணங்களை நம்பி இருக்கும் சூழலைக் குறைக்கும் வகையிலும் மிலிட்டரி காம்பட் பாராசூட் சிஸ்டம் உதவும் என்பதுதான் ஹைலைட்.
இந்த வெற்றிகரமான சாதனைக்காக DRDO, ஆயுதப்படைகள் மற்றும் தொழில்துறையினருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு திறனில் ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மிலிட்டரி காம்பட் பாராசூட் சிஸ்டம் விமானப் படையின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் முழுமையான தன்னிறைவு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது… இந்தியாவின் அடுத்த கட்ட அத்தியாயமாகவும் திகழ்கிறது என்பதுதான் இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கிறது.