யூடியூப் விளம்பரத்தை நம்பி ஆன்லைனில் பட்டாசு ஆர்டர் செய்து பணத்தை இழந்ததாகப் பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் அம்மன்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, மலிவான விலையில் சிவகாசி பட்டாசு கிடைப்பதாகக் கூறி யூடியூப் மற்றும் இன்ஸ்டகிராமில் வந்த ரீல்ஸை நம்பி ஆர்டர் செய்துள்ளார்.
இதற்காக முன்பணமாக ஏழாயிரத்து 785 ரூபாயை போன் பே மூலம் செலுத்தியுள்ளார். பின்னர் மீண்டும் சம்பந்தப்பட்ட யூடியூபில் உள்ள பட்டாசு கடையின் அலைபேசி எண்ணிற்கு அழைத்தபோது முறையாகப் பதில் அளிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மணிகண்டன், பொய்யான விளம்பரங்களைப் பொதுமக்களிடம் பரப்பிய யூடியூபர் மீதும், மோசடியில் ஈடுபட்ட கும்பல் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கூறி திருநீலக்குடி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.