தீபாவளி பண்டிகையை ஒட்டிச் சேலம் அருகே 50க்கும் மேற்பட்ட வீடுகளில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் சுடச்சுட பலகாரங்களை தயார் செய்து வருகின்றனர். இந்தப் பலகாரங்களில் அப்படி என்ன தனிச்சிறப்பு…? பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…
சேலம் மாவட்டத்தில் ஆட்டையாம்பட்டி, மருளபாளையம், மல்லசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. இங்கே நடைபெறும் குடிசை தொழில்தான் தீபாவளி நேரத்தில் கூடுதலாகக் களைகட்டியுள்ளது. 50க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ள இந்தக் குடிசை தொழிலில்தான் விதவிதமான பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இப்படி முறுக்கு, அதிரசம், தட்டு வடை எனத் தயாராகும் பலகாரங்களுக்குத் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்தப் பலகாரங்களின் தனி ருசிக்கும், மணத்திற்கும் அவற்றைத் தயாரிக்கும் பெண்களின் கைப்பக்குவமே காரணம் என உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் இந்தப் பலகாரங்களை வாங்கிச் செல்கின்றனர். பலர் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து எனப் பல்வேறு வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் உறவினர்களுக்கும் இந்தப் பலகாரங்களை வாங்கி அனுப்புகின்றனர். இந்தப் பலகாரங்களுக்காகப் பிரத்யேகமான, அரிசி, உளுந்து ஆகியவற்றை முதல் நாள் மதியமே தண்ணீரில் ஊற வைக்கின்றனர்.
பின்னர் அதனை அதிகாலை 3 மணிக்கு இரண்டு முறை சுத்தம் செய்கின்றனர். 4 மணிக்கு அதனைப் பக்குவமாக இரண்டு எந்திரங்களில் அரைத்து, அதில் தேவையான அளவுக் கடலை மாவு, ஓமம், எள், பொட்டுக்கடலை, மிளகாய் பொடி, பெருங்காயம் ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து பிசைந்து முறுக்குகளை தங்களின் கைகளாலே பெண்கள் சுற்றுகின்றனர்.
தட்டு வடைக்கு நிலக்கடலை பருப்பை முழுமையானதாகவும், உடைத்தும் சேர்த்து அதற்கான மிஷின் மூலம் தயாரிக்கின்றனர். சிறிது நேரம் காற்றில் உலரச் செய்து, இரண்டு முறை எண்ணெய் சட்டியில் வேக வைத்த பின்னரே தட்டு வடையை விற்பனைக்கு அனுப்புகின்றனர். இதேபோல் அதிரசத்தின் அலாதியான ருசிக்கும் காரணம் இருக்கிறது.
உருண்டை வெள்ளத்தை பக்குவப்படுத்தி அதனுடன் புளிக்கச் செய்த அரிசி மாவை சேர்த்து மிதமான பக்குவத்தில் எண்ணெயில் வேக வைத்து அதிரசம் தயார் செய்கின்றனர். இந்த ருசிதான் பலரையும் கவர்ந்திழுக்கிறது.
தீபாவளி பண்டிகைக்காக ஆயுத பூஜை முடிந்த மறுநாள் துவங்கி தற்போது வரை இந்தப் பலகாரங்கள் படுஜோராகத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. பெண்களால் இரவு பகலாகத் தயாரிக்கப்படும் இந்தப் பலகாரங்களைப் பலரும் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.