கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து 30 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் படி சேலத்திலும் கடந்த சிலநாட்களாக மழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் நீர்வரத்து 22 ஆயிரத்து கன அடியில் இருந்து 30 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்தது.
பாசன வசதி மற்றும் உபரி நீர் பாதை வழியாக அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதே போலத் தருமபுரியில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி 9,500 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.