இஸ்ரேல் – காசா எல்லையைப் பிரிக்கப் போடப்பட்டுள்ள மஞ்சள் கோடு தற்போது மக்களின் உயிரைப் பறிக்கும் பேராபத்தாக மாறி வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.
அமெரிக்கா நடத்திய இடைநிலை உடன்படிக்கையின் கீழ் இஸ்ரேல் – காசா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி இஸ்ரேல் படையினர் காசாவில் தங்கள் படைகளை விலக்கிக்கொள்ளும் வரம்பாக “மஞ்சள் கோடு” என்ற பெயரில் கற்பனை கோடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்தக் கோட்டை கடப்பவர்கள் மீதும், அதன் அருகே நெருங்குபவர்கள் மீதும் இஸ்ரேல் படைகள் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மட்டும் இதுவரை நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் காசா அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் 20 அம்ச இடைநிலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கற்பனை எல்லையே இந்த மஞ்சள் கோட்டை வரையறுத்துள்ளது. அமைதி ஒப்பந்தம் அமலுக்கு வந்ததடையடுத்து கடந்த 10-ம் தேதி முதல் இஸ்ரேல் படைகள் காசாவை விட்டு வெளியேறத் தொடங்கியிருந்தாலும், காசாவின் தென்மேற்கு ரஃபா பகுதிகள், வடக்கு பகுதிகள் மற்றும் காசா நகரின் முக்கிய பகுதிகள் உட்பட 50 சதவீத பகுதிகளை இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் இந்த மஞ்சள் கோட்டை நெருங்குபவர்கள் மீது முன்னெச்சரிக்கைகளின்றி இஸ்ரேல் படைகள் சரமாரி தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். கற்பனையான மஞ்சள் கோட்டை கான்கிரீட் கற்களை வைத்து அடையாள படுத்தி வருவதாக இஸ்ரேல் படைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், நிகழ்ந்து வரும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களின் உயிரிழப்புகள், இந்தக் கோடு மக்களின் உயிருக்குப் பாதுகாப்பற்ற பகுதி என்பதை உறுதிபடுத்துவதாகக் காசா சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே காசா அரசின் செய்தித்துறை அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், கடந்த 10-ம் தேதி முதல் இதுவரை 80-க்கும் மேற்பட்ட இடைநிலை உடன்படிக்கை மீறல்களில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. இஸ்ரேல் படைகள் அத்துமீறி நடத்திய தாக்குதல்களால் நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 230 பேர் வரை காயமடைந்து உள்ளதாகவும் இன்னும் பலர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், இஸ்ரேல் படைகளின் தாக்குதல்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காசா அரசுக் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் படைகளின் அத்துமீறிய தாக்குதல்களைக் கொடுங்குற்றங்கள் எனக் குறிப்பிட்டு ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. சாமானிய மக்களை இலக்காக வைத்து நடத்தப்படும் இஸ்ரேலின் தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் சர்வதேச நடுநிலை வகிக்கும் பிற நாடுகள் தடுத்து நிறுத்தி, இடைநிலை உடன்படிக்கையை மதிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹமாஸ் அமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் போரால் இதுவரை காசாவில், 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர். காசாவின் 90 சதவீத உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மாசுபாடுகளால் காசா மக்களுக்கு மஞ்சள் கோடு எங்குள்ளது என அறிய முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதனால், ‘மஞ்சள் கோடு’ என்ற கற்பனை கோடு பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், தொடர்ந்து மீறப்பட்டு வரும் இடைநிலை உடன்படிக்கை குறித்து நடுநிலைவாதிகள் எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.