தைவானைக் கைப்பற்ற தீவிரமாக இருக்கும் சீனாவுக்குத் தைவான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உள்நாட்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாக ஆக்ரமிப்பு நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்ளதாகவும் தைவான் குற்றஞ்சாட்டியுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாகப் பிரிந்து சென்றது. தைவானை தனி சுதந்திர நாடாக இதுவரை அங்கீகரிக்காத சீனா அதன் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வருகிறது. அதன்படி தைவானுடன் எந்த நாடும் தூதரக உறவுகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் சீனா எச்சரித்து வருகிறது.
தைவானுக்கு ஆதரவாக அமெரிக்க உள்ளது. தனது முதல் பதவி காலத்தில் அதிபர் ட்ரம்ப், F-16 ரக போர் விமானங்கள் உட்பட 21 பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்களைத் தைவானுக்கு வழங்க உத்தரவிட்டார். 1 தொடர்ந்து முந்தைய ஜோ பைடன் ஆட்சி காலத்திலும் சுமார் 7 பில்லியன் டாலர் மதிப்புடைய ராணுவ ஒப்பந்தங்களில் தைவானுடன் அமெரிக்கா கையெழுத்திட்டது.
மீண்டும் அமெரிக்க அதிபரான ட்ரம்ப், தைவானுக்கு வழங்கப்படும் ஆயுத உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். இது சீனாவுடன் சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு, தைவானை பேரம் பேசும் பொருளாக ட்ரம்ப் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டது.
அதற்கேற்ப, கடந்த செப்டம்பரில், தைவானை வலுக்கட்டாயமாகக் கைப்பற்ற சீனாவின் முயற்சி “உடனடியாக நடக்கலாம் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்திருந்தார். முன்னதாகக் கடந்த ஜூன் மாதத்தில், தைவான் வான் எல்லைக்குள் ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்கள் சீறிப் பறந்தன.
இப்படி, தைவான் எல்லைக்குள் அத்துமீறிப் போர் பதற்றத்தை சீனா அடிக்கடி ஏற்படுத்தி வருகிறது. முன்னதாகக் கடந்த ஏப்ரல் மாதத்தில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் Strait Thunder-2025A என்று பெயரிடப்பட்ட இரண்டு நாள் ராணுவ நடவடிக்கையைத் தைவான் எல்லையில் நடத்தியது. இது தைவானைச் சுற்றி இந்த ஆண்டில் சீனா நடத்திய மிகப் பெரிய இராணுவப் போர்ப் பயிற்சியாகும்.
ஏற்கெனவே, கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதங்களில் “கூட்டு வாள்-2024 ”என்ற பெயரில் சீனா தீவிர இராணுவப் பயிற்சிகளை நடத்தியுள்ளது. கடந்த டிசம்பரில் பெரிய அளவிலான கடற்படை பயிற்சிகளையும் சீனா மேற்கொண்டது.
தைவானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் துறைமுக வசதிகளுக்கு எதிராக உருவகப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்துவதற்கான ஆத்திரமூட்டும் வகையில் சீனாவின் கடற்படை பயிற்சிகள் இருந்ததாகச் செய்திகள் தெரிவித்தன.
குறிப்பாக, தைவானின் தற்போதைய அரசியல் தலைமைக்கு எதிராகவும், தைவான் அதிபர் லாய் சிங்-டே வுக்கு எதிராகவும் சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. ‘தைவான் மீது சீன இராணுவத்தின் இறுக்கமான முற்றுகையை நிரூபிப்பதாக அமைந்த சீனாவின் இந்த இராணுவப் பயிற்சிகளின்போது, “பேய்களை அடக்கி, தீமைகளை வெல்லுங்கள்” என்ற தலைப்பில், புராண சீன மன்னர் அந்நாட்டு இராணுவத்தை வெற்றிக்கு இட்டுச் செல்வதைச் சித்தரிக்கும் ஒரு காணொளியையும் சீன இராணுவம் வெளியிட்டுள்ளது.
இந்தச் சூழலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, தைவானின் பிரதான எதிர்க்கட்சியான கோமின்டாங்கின் (KMT) புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்குச் சீன அதிபர் ஜி ஜிங்பிங்க் வாழ்த்து தெரிவித்திருந்தார். தனது வாழ்த்துச் செய்தியில், மீண்டும் ஒன்றிணைவதற்கான புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார் சீன அதிபர்.
இதற்குப் பதிலளித்த தைவான் எதிர்கட்சியின் புதிய தலைவர் செங், மறு ஒருங்கிணைப்பு பற்றிய எந்தக் குறிப்பையும் சொல்லவில்லை என்றாலும், தைவான் ஜலசந்தியின் இருபுறமும் உள்ள மக்கள் “சீன தேசத்தின் உறுப்பினர்கள்” என்று கூறியிருந்தார். மேலும், தைவான் எதிர்கட்சித் தலைவர் செங், நாட்டின் பாதுகாப்புக்காகத் தைவான் அரசு அதிகம் செலவு செய்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியில், எந்தவொரு சீன ஆக்கிரமிப்பிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தைவான் உறுதியாக உள்ளது என்று தெரிவித்துள்ள தைவானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ஜோசப் வூ சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உள்நாட்டு சவால்களைத் தீர்ப்பதற்குப் பதிலாகத் தைவான் மீது ராணுவ மற்றும் இராஜதந்திர அழுத்தத்தைத் தீவிரப்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
















