திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா, யாகச் சாலை பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா ஒரு வாரம் வெகுவிமரிசையாக நடைபெறும்.
அதன்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடப்பாண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதிகாலை 1 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளிய நிலையில், காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.
விரதம் மேற்கொள்ள வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி அங்கபிரதட்சணம் மற்றும் அடி பிரதட்சணம் செய்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
இதனிடையே, கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விரைவு தரிசனத்திற்கான 100 ரூபாய் கட்டணம் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கந்த சஷ்டி திருவிழா நிறைவு பெறும் 28ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும், பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.