அலாஸ்காவில் அதிபர் புதின் அதிபர் ட்ரம்ப் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்புக்குப் பிறகு மீண்டும் இருவரும் ஹங்கேரியில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், புதினை சந்திக்கப்போவதில்லை என அதிபர் ட்ரம்ப் திடீரென அறிவித்துள்ளது. ட்ரம்பின் இந்தத் திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம்? மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ரஷ்யா உக்ரைன் போர்முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவதற்கு என்ன காரணம்? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இருவருக்கும் இடையேயான சந்திப்பு, ஹங்கேரியில் ( Budapest ) புடாபெஸ்ட் நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தச் சந்திப்புகுறித்து தற்போதைக்கு எந்தத் திட்டமும் இல்லை எனத் திடீரென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இடையேயான தொலைபேசி உரையாடல் பயனுள்ளதாக இருந்ததால், கூடுதலாக அதிபர்களின் நேரடிச் சந்திப்புக்கான அவசியம் இல்லை” என்றும் வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாகக் கடந்த அக்டோபர் 16ம் தேதி, ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, புடாபெஸ்டில் (Budapest) இருவரும் மீண்டும் சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்தச் சந்திப்புக்கான ஆயத்தப் பணிகளுக்காகவே, அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோவும், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவும் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, ரஷ்யா கைப்பற்றியுள்ள Donetsk மற்றும் Luhansk ஆகிய பகுதிகளை ரஷ்யாவிடம் ஒப்படைக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபரை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
உக்ரைனின் எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், போர் நிறுத்தம் ஏற்பட ட்ரம்ப் முன்வைத்த யோசனையை உறுதியாக நிராகரித்த ரஷ்யா, நீண்டகால மற்றும் நிலையான அமைதி மட்டுமே தங்களின் நோக்கம் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும், போர்நிறுத்தம் செய்தால், உக்ரைனின் பெரும் பகுதி நாஜிக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று குற்றம்சாட்டியுள்ள ரஷ்யா, எந்தவொரு நீடித்த ஒப்பந்தமும் போரின் மூல காரணங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
ரஷ்யா போர்நிறுத்தத்தை நிராகரிப்பது இது முதல் முறையல்ல. இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையின் போதும், ரஷ்ய பிரதிநிதிகள் குழு, போரை நிறுத்துவது தொடர்பாக உக்ரைனுக்கு பல நிபந்தனைகள் அடங்கிய குறிப்பாணையை (memorandum) முன்வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவுடனான உக்ரைனின் கூட்டணியும், நேட்டோவில் சேரும் விருப்பமும் ரஷ்யாவை அச்சுறுத்துவதாகும் என்றும் ஜெலென்ஸ்கி சட்டப் பூர்வமாக அதிபராகவில்லை என்றும் கூறும் ரஷ்யா, உக்ரைனில் புதிதாக அதிபர் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், உக்ரைன் நேட்டோவில் சேரக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, ரஷ்யா முழுவதும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் ராணுவ தளங்களை குறி வைத்து உக்ரைன் படைகள் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
















