குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டிச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
4 நாட்கள் சுற்றுப்பயணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேரள மாநிலம் சென்றுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் சிலை திறப்பு விழா, வர்க்கலா சிவகிரி மடத்தில் நடக்கும் ஸ்ரீ நாராயணகுரு மகா சமாதி நூற்றாண்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அதன்படி சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, அவர் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் பந்தனம்திட்டா அருகே பிரமாடம் பகுதிக்குச் சென்றடைந்தார்.
பின்னர் அங்கிருந்து பம்பை கணபதி கோயிலுக்குக் கார் மூலம் சென்ற திரௌபதி முர்மு பம்பையில் இருந்து இருமுடி கட்டி சன்னிதானத்திற்கு சிறப்பு வாகனத்தில் சென்றார்.
அதனைத்தொடர்ந்து 18ஆம் படி ஏறிச் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை காரணமாகச் சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.