ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதன் மூலம் தெற்காசிய அரசியலில் இந்தியாவின் ராஜதந்திரம் பாகிஸ்தானுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆப்கானை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற முயற்சி செய்து வருகிறார்கள். தேசத்தை நடத்துவதற்கான பணத்தேவையை ஐநா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிடம் இருந்தே பெற்று வருகிறார்கள். எனவே, நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கவும், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவும் தீவிர முயற்சியில் இருக்கும் தலிபான்கள் இந்தியாவுடன் நட்புறவையே கொண்டுள்ளனர்.
இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையே வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் அளவில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தன. பகல்காம் பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டித்தது தலிபான் அரசு. தொடர்ந்து மத்திய வெளியறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசியில் பேசிய ஆப்கான் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
மத்திய அரசின் அழைப்பையேற்று ஆப்கான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்தியாவுக்கு வந்த நேரத்தில், காபூலில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆப்கான் எல்லைப்பகுதியில் இருநாட்டு படைகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
தலிபான்களின் தாக்குதலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பின்னடைவை சந்தித்தது. மேலும் பாகிஸ்தான் அரசின் வேண்டுகோளுக்கு இணங்கத் தலிபான் அரசுப் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தது. பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் உறவு மோசமடைந்ததற்கு இந்தியா காரணம் என்றும், ஆப்கான் தலிபான்களை வைத்து இந்தியா பாகிஸ்தான் மீது மறைமுக போரை நடத்துவதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. குறிப்பாக இந்தியாவின் மடியில் அமர்ந்து மறைமுகப் போரை தலிபான் அரசு நடத்துவதாகப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்திருந்தார்.
உள்நாட்டு பிரச்சனைகளைத் திசை திருப்ப இந்தியா மீது குற்றம் சொல்வது பாகிஸ்தானின் வழக்கம் என்று மத்திய வெளியுறவு அமைச்சக அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். மேலும், ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்துக்கு இந்தியா முழுமையாக ஒத்துழைக்கும் என்றும் தெளிவுப் படுத்தி இருந்தார்.
பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள ஆப்கான் அரசு ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதல்களில் இந்தியா எந்தப் பங்கையும் வகிக்க வில்லை எனக் கூறியுள்ளது. மேலும், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் “ஆதாரமற்றவை, நியாயமற்றவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சரும் தலிபான் நிறுவனர் மறைந்த முல்லா உமரின் மகனுமான முகமது யாகூப் கூறியுள்ளார்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய பிரதிநிதிகள் அலுவலகம் மீண்டும் தூதரகமாக மாற்றப் பட்டுள்ளது. இது இருதரப்பு உறவை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், ஆப்கான் மக்களுக்கான மனிதாபிமான உதவி மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இத்கைய சூழலில், ஆப்கானிஸ்தான் பொருளாதாரத்துக்கு இன்றியமையாத முக்கிய தேசிய திட்டங்களை முடிப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. ஆப்கான் துணைப் பிரதமர் முல்லா அப்துல் கனி பரதார், துர்க்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா எரிவாயு குழாய்த் திட்டப் பணிகளை விரைவுபடுத்துவதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
இந்த இயற்கை எரிவாயு குழாய் பாதை துர்க்மெனிஸ்தானின் கல்கினிஷ் எரிவாயு வயலில் தொடங்குகிறது. ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள செர்கேதாபாத் என்னும் பகுதியிலிருந்து தொடங்கப்படும் இந்தத் திட்டம், தெற்கு ஆப்கானிஸ்தான் மாகாணங்களின் வழியாகப் பாகிஸ்தானைக் கடந்து, இந்திய எல்லையான ஃபாஸில்கா பகுதியில் நிறைவுபெறுகிறது. கடந்த பிப்ரவரியில் இந்த இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தில் ஆப்கானிஸ்தான் பகுதிக்கான பணிகளைத் தொடங்கத் தயாராக இருப்பதாகத் தலிபான்கள் அறிவித்தனர்.
கடந்த செப்டம்பரில் இயற்கை எரிவாயு குழாய் பாதையின் ஆப்கானிஸ்தான் பகுதி கட்டுமானத்தை ஆப்கான் அரசு தொடங்கியது. நான்கு நாடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் இந்தத் திட்டத்தில் ஆப்கானில் இதுவரை, 14 கிலோமீட்டர்களுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 70 கிலோமீட்டர்களுக்கான பணிகள் அடுத்த 14 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இத்திட்டத்தின் மூலம், ஐந்து பில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயு கிடைக்கும் என்றும், மீதமுள்ளவை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக 2015-ல் துர்க்மெனிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, எரிசக்தி துறையில் ஒத்துழைப்புக்கான துர்க்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா (TAPI) குழாய் திட்டத்தைச் சரியான நேரத்தில் செயல்படுத்துவதற்கான முன் முயற்சியை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.