இலங்கையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இலங்கையின் மாத்தறை பகுதியில் உள்ள வெலிகம பிரதேச சபையில், காலை 10 மணிக்கு அந்த அமைப்பின் தலைவர் லசந்த விக்ரமசேகர வழக்கமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்மநபர், அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த லசந்த விக்ரமசேகரவை பணியாளர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், லசந்த விக்ரமசேகரவை மர்மநபர்கள் சுட்டுக்கொன்று இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும், இருவரில் ஒருவர் லசந்த விக்ரசேகரவிடம் கையெழுத்து வாங்குவதாக கூறி சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கி உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.