₹78,000 கோடி நிதி எங்கு சென்றது என்பதற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ஈரோடு மாவட்டம்,அந்தியூர் சட்டமன்ற தொகுதி பர்கூர் மலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் தமிழக கர்நாடகா எல்லைப் பகுதியான இங்கு, குட்டையூர், வேலாம்பட்டி, மட்டிமரத்தள்ளி ஆகிய மலை கிராமங்களுக்கு, நேரடியாகச் செல்ல பாதை இல்லாததால், கர்நாடக, தமிழக வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள கர்கேகண்டி நீரோடை பள்ளம் வழியாக, சுமார் 20 கிலோ மீட்டர் பயணித்தே இந்த கிராமங்களுக்குச் செல்ல முடியும்.
இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக, கர்கேகண்டி நீரோடை பள்ளத்தில், காட்டாறு வெள்ளமாக ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமலும், அவசர தேவைக்கு கூட கிராமத்திலிருந்து வெளியே செல்ல முடியாமலும் முடங்கிக் கிடக்கின்றனர்.
பல ஆண்டுகளாக, பொதுமக்கள் சிரமமின்றி கடந்து கிராம பகுதிக்குச் செல்ல, இந்தப் பகுதியில் உயர்மட்டப் பாலம் அமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியும், தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்து கடந்த ஐந்து ஆண்டுகளில், சாலைகள் அமைக்க, பாலங்கள் கட்ட என, சுமார் ₹78,000 கோடி செலவிட்டுள்ளதாக, நிதிநிலை அறிக்கையில் கூறுகிறது.
ஆனால், தமிழகத்தில் பல கிராமங்களில், இன்னும் சாலை வசதிகள் செய்யப்படவில்லை. மத்திய அரசு வழங்கும் கிராம சாலைகள் திட்டத்துக்கான நிதியும், எங்கு செல்கிறது என்பது தெரியவில்லை. ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாக, மக்கள் வரிப்பணத்தை விளம்பரங்களுக்கு வீணடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சாலை வசதிகளைக் கூட ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பது வெட்கக்கேடு என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
நான்கரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல், ஆட்சி முடியும் நேரத்தில், உங்களுடன் ஸ்டாலின் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன்? ஒவ்வொரு மழைக்காலத்திலும், இது போன்ற கிராம மக்கள் அவதிப்படுவது முதலமைச்சருக்குத் தெரியாதா? சாலைகள் அமைத்தோம் என்று கணக்கு காட்டியிருக்கும் சுமார் ₹78,000 கோடி நிதி எங்கு சென்றது என்பதற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், போர்க்கால அடிப்படையில், சாலை வசதிகளற்ற மலைக்கிராமங்களுக்கு, உடனடியாகச் சாலைகள், உயர்மட்டப் பாலங்கள் அமைத்துத் தர வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.