திமுக அரசு, டெல்டா மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்திட வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டு 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்துள்ளது. நெல் அறுவடைப் பணிகள் கடந்த 1-ஆம் தேதி முதல் தீவிரமாக நடந்து வந்தன. அவ்வாறு அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல்லில், 40% அளவுக்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.
நெல் கொள்முதல் செய்ய முன்கூட்டியே எந்த ஏற்பாடும் செய்யாததால் டெல்டா மாவட்டங்களில் அறுவடையான நெல் தேங்கும் நிலை ஏற்பட்டது. கொள்முதல் நிலையங்கள் தாமதமாக திறக்கப்பட்டதாகவும், நெல் பிடிப்பதற்கு சாக்கு மூட்டைகள், சணல் பைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் ஏற்பாடு செய்யவில்லை.
சுமை துாக்கும் தொழிலாளர்கள் தட்டுப்பாடு, நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்வதற்கு தேவையான லாரிகள் இல்லாதது போன்ற பிரச்னைகளால், கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே, பல நாட்கள் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக திமுக அரசு அறிவித்திருந்தது. ஆனால், வெறும் 800 மூட்டைகள் தான் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்து அரிசியாக்கும் பணியும் நடைபெறவில்லை.
இந்தநிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. பருவமழைக்கு முன்பாக நெல் கொள்முதலை முடித்திருக்க வேண்டிய திமுக அரசு அதனை செய்திடவில்லை. இதனால் கொட்டித் தீர்க்கும் கனமழையில் லட்சக்கணக்கான டன் நெல் நனைந்து வீணாகி வருகின்றன.
திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில், 20 லட்சம் டன் நெல் வீணாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெல் கொள்முதல் செய்யாமல் சுமார் 20 நாட்கள் காலதாமதம் ஆனதால் தொடர் மழையால் நெல் முளைத்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை உரிய நேரத்தில் விற்க முடியாமல் பெரும் சோகத்திற்கு ஆளாகி தவிக்கின்றனர்.
ஆனால் அமைச்சர்களும், அதிகாரிகளும் வழக்கம்போல் புதுப்புது காரணங்களை தேடிப்பிடித்து கூறி வருகின்றனர். விவசாயிகளின் வேதனையை அறிந்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியத்துடன் நடந்து கொள்ளும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, திமுக அரசு சாக்குபோக்கு கூறுவதை கைவிட்டு டெல்டா மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்திட வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல். முருகன் வலியுறுத்தி உள்ளார்.