நவீன உலகில் ஏ.ஐ. தொழில்நுட்பம் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பரவலாக பயனர்களை பெற்று வருகிறது. வளர்ந்து வரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் நாட்டு மக்களுக்கு வரும் ஆபத்துகளை குறைக்க கடுமையான விதிகளை விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிய உயரத்தை தொட்டுவரும் நிலையில், ஏ.ஐ. தளங்களை ஒழுங்குபடுத்த இந்தியா புதிய விதிகளை வகுக்கத் திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி இணைய பயனர்களைக் கொண்ட, பல இன, மொழி, மதத்தினரைக் கொண்ட பரந்த நாட்டில், போலியான செய்திகள், கடுமையான மோதல்களைத் தூண்டிவிடும் அபாயம் உள்ளது.
பயனர்களுக்குத் தீங்கு விளைவித்தல், தவறான தகவல்களை பரப்புதல், தேர்தல்களை கையாளுதல் அல்லது தனிநபர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்தல் போன்றவற்றுக்காக உருவாக்கப்படும் AI கருவிகளை தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியுள்ளது.
செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட டீப் ஃபேக்குகள் மற்றும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட உள்ளடக்கத்தால் ஏற்படும் தீங்கைத் தவிர்க்கும் நோக்கில், ஐ.டி. அமைச்சகம் 2021ம் ஆண்டு ஐ.டி. விதிகளில் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.
இது பயனர்கள் செயற்கை எது, உண்மை எது என்ற உள்ளடக்கத்தை வேறுபடுத்திப் பார்க்க உதவும், தெளிவான லேபிளிங்கை கட்டாயமாக்குகிறது. எனவேதான் அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய தெளிவான லேபிளிங்கை ஐ.டி. அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.
புதிய விதிகளின்படி, ஏ.ஐ. உருவாக்கிய உள்ளடக்கத்தை, வீடியோவின் பரப்பளவில் குறைந்தது 10 சதவிகிதமும், ஆடியோ கிளிப்பில் தொடக்கத்தில் 10 சதவிகிதத்தையும் உள்ளடக்கிய குறிப்புகளை லேபிளிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது OpenAI, Meta, X மற்றும் Google போன்றவற்றின் மீது அதிக பொறுப்புகளைச் சுமத்துகிறது. பதிவேற்றப்பட்ட தகவல்கள் AI-யால் உருவாக்கப்பட்டதா என்பது குறித்த தகவல்களைச் சமூக ஊடக நிறுவனங்கள் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விதிகள் பயனர்கள் எதிர்கொள்ளும் அனைத்து AI உருவாக்கிய ஊடகங்களுக்கும் புலப்படும் லேபிளிங், மெட்டாடேட்டா கண்டறியும் தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது.
இதுதொடர்பாக நவம்பர் 6ம் தேதிக்குள் பரிந்துரைகளை வழங்குமாறு பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இந்தியா உலகளவில் இரண்டாவது பெரிய சந்தையாக உள்ளது.
கடந்த ஆண்டில் இது மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும் ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறியிருந்தார். டீப்ஃபேக்குள் தொடர்பான வழக்குளை நீதிமன்றங்கள் ஏற்கனவே விசாரித்து வருகின்றன. இந்த நிலையில், வீடியோக்களில் 10 சதவிகித லேபிளிங், சர்வதேச அளவில் தெரிவுநிலை தரத்தைப் பரிந்துரைக்கும் முதல் வெளிப்படையான முயற்சிகளின் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும், சீனாவில் இது போன்ற ஏ.ஐ. வீடியோக்கள் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதனை தவிர்க்கப் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.