மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபம் அருகே பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை முறையாக மீட்டு பராமரிக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும் உத்தரவிடக் கோரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்த விசாரணையில், கூடுதல் ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது, மண்டபம் அருகே அடுப்பு வைத்து பிரசாதம் தயாரிப்பதை அனுமதிக்க கூடாது எனவும், கோயில் நிதியிலிருந்து குடமுழுக்கு பணிகளுக்காக செலவு செய்யப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அனுமதி பெற்று தான் பிரசாதம் தயாரிக்கப்படுவதாகவும், வெளியில் தயாரித்தால் தரம் உறுதி செய்ய இயலாது எனவும் கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, மண்டபம் அருகே அடுப்பு வைத்து பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், மாற்று வழி குறித்து கோயில் இணை ஆணையர் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
















