தமிழகத்திற்கு புதிய டி.ஜி.பி.,யை நியமிக்க, மத்திய அரசு அனுப்பிய பட்டியலை தமிழக அரசு ஏற்காததால், புதிய டி.ஜி.பி நியமனத்தில் இழுபறி நீடிக்கிறது.
புதிய டி.ஜி.பி.,யை நியமிப்பதற்காக, தமிழக அரசு சார்பில், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் டேவிட்சன் தேவாசீர்வாதம், சந்தீப் மிட்டல், பாலநாகதேவி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த பட்டியலானது, கடந்த செப்டம்பர் 1ம் தேதி யு.பி.எஸ்.சி., அலுவலகம் சென்றடைந்த நிலையில், புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான கூட்டம், செப்டம்பர் 26-ம் தேதி நடந்தது.
அப்போது, சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோட், மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரின் பெயரை பட்டியலில் சேர்க்க , தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ,
பட்டியலில் முதலிடத்தில் இருந்த சீமா அகர்வால், குறைந்த ஆண்டுகளே சட்டம் – ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்துள்ளதாகவும், கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சந்தீப் ராய் ரத்தோட் திறம்பட பணியாற்றவில்லை எனவும் தமிழக அரசு தெரிவித்தது.
மேலும் டேவிட்சன் தேவாசீர்வாதம், சந்தீப் மிட்டல், பாலநாகதேவி ஆகியோரில் ஒருவரின் பெயரை இறுதி செய்து தரும்படியும் கேட்கப்பட்டது.
ஆனால், தமிழக அரசு கோரிய 3 நபர்களின் பெயர்களும் பட்டியலில் இடம்பெறவில்லை.
சீமா அகர்வால், ராஜிவ் குமார், சந்தீப் ராய் ரத்தோட் ஆகியோரின் பெயர்கள் அடங்கிய பட்டியலானது ஒரு மாதத்திற்கு முன்னரே தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.
எதிர்பார்த்த நபரின் பெயர் பட்டியலில் இடம் பெறாததால் அதை ஏற்க தமிழக அரசு மறுத்து விட்டதாகவும், இதனால் புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பதாகவும் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















