கேரளாவில் முதல் முறையாகக் கொச்சி துறைமுகத்தையும் எர்ணாகுளத்தையும் இணைக்கும் வகையில் கடலுக்குள் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.
மொத்தம் 2.75 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை குழாய் சுரங்கப் பாதையில், 1.75 கிலோ மீட்டர் தூரம் சுரங்கம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாயிரத்து 672 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் கட்டுமான பணிகளை முடிக்க 30 மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
கடலோர நெடுஞ்சாலை திட்டத்திற்கு நிதியளிக்கும் கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு வாரியம், சுரங்கப்பாதை திட்டத்திற்கும் நிதியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொச்சி துறைமுகத்தில் இருந்து எர்ணாகுளம் செல்லும் பயணிகள், திரும்பி வர இரண்டரை மணி நேரத்தைச் செலவிடுகின்றனர்.
அவர்கள் ஆட்டோ கட்டணமாக நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் செலவிடும் நிலையில், இந்தச் சுரங்கப்பாதை செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் வெறும் 50 ரூபாய் செலவிட்டால், எர்ணாகுளத்தை அடைந்துவிடலாம். மாதம் முழுவதும் செல்லும் பயணிகள் 1500 ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
















