கிருஷ்ணகிரி மாவட்டம் அட்டப்பள்ளம் கிராமத்தில் நிலவும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த அஞ்செட்டி பகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
லேசான மழைக்கே கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் நிலையில், கனமழை காரணமாக அட்டப்பள்ளம் கிராமத்தில் கடந்த 3 நாட்களாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், தங்களது கிராமத்திற்கு சீரான மின்சாரத்தை வழங்கக் கோரியும், நாட்றாம்பாளையம் பகுதியில் புதிய துணை மின்நிலையம் அமைக்க வலியுறுத்தியும் அஞ்செட்டி – ஒகேனக்கல் சாலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
















