பீகார் சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், பிகார் தேர்தலுக்கான பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி தொடங்கினார். சமஸ்திபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, NDA கூட்டணி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்று ஒட்டுமொத்த பீகார் மக்களும் விரும்புவதாகத் தெரிவித்தார்.
RJD மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக விமர்சித்த பிரதமர் மோடி, பீகாரில் இதுவரை இல்லாத அளவிற்கு NDA கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, சமஸ்திபூரில் உள்ள பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, அவரது குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடினார்.
பின்னர், கர்பூரி கிராம் பகுதிக்குச் சென்ற அவருக்குப் பாரம்பரிய முறைப்படி பெண்கள் வரவேற்பு அளித்தனர்.
















