ஜம்மு-காஷ்மீரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மனித உரிமை மீறலில் ஈடுபடுவதை பாகிஸ்தான் கைவிட வேண்டுமென ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் மத்திய கிழக்கு நிலவரம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக ஜம்மு-காஷ்மீர் இருந்து வருவதாக தெரிவித்தார்.
நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்புகளின்படியே ஜம்மு மக்கள் தங்கள் உரிமைகளை பயன்படுத்தி வருவதாக கூறிய அவர், பாகிஸ்தானின் சட்ட விரோத செயல்களுக்கு மக்கள் நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், காஷ்மீரின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மனித உரிமை மீறலில் ஈடுபடுவதை பாகிஸ்தான் கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
















