தஞ்சாவூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : இந்திய வானிலை ஆய்வு மையமும், தமிழ்நாடு வானிலை ஆய்வு மையமும், தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக பலமுறை எச்சரித்திருந்தபோதும், நெல் கொள்முதலை துரிதப்படுத்தாமல், விவசாயிகளை அலட்சியம் செய்ததன் விளைவாக நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, எதற்கும் பயனின்றி அழுகி நாசமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடியில், நன்கு விளைந்த நெல் மணிகள், மழை வெள்ளத்தில் சரிந்து, நீரில் மூழ்கி முளைக்கட்ட தொடங்கி இருக்கிறது. இதனால் வேதனை அடைந்திருக்கும் விவசாயிகளையும் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
எந்த குற்றச்சாட்டை முன்வைத்தாலும், எதிர்க்கட்சிகள் எந்த விமர்சனத்தை கூறினாலும், மக்கள் எந்த கோரிக்கையை எடுத்துரைத்தாலும், அதை ஏற்றுக் கொண்டு சரிசெய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வெறும் வாய்ஜாலங்கள் மூலம் அனைவரையும் திமுக அரச ஏமாற்றிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
அதன் விளைவாக, விவசாயிகள் தங்கள் குழந்தைகளைப் போல் பாதுகாப்பாக பராமரித்து, விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகள் வீணாகியுள்ளன. விவசாயி விரோத திமுக அரசின் உண்மையான முகம் இதுவே என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
















