நடப்பாண்டு அதிக மகசூல் கிடைத்தும் டெல்டா விவசாயிகள் படும் இன்னல்களுக்கு தமிழக அரசும், முதலமைச்சருமே காரணம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சை மாவட்டம், ஆலக்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல்மணிகளை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். தொடர்ந்து நெல்லை கொள்முதல் செய்யாததால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, முளைத்து வீணான நெல்மணிகளை நயினார் நாகேந்திரனிடம் கொடுத்து, விவசாய மக்கள் தங்களது வேதனைகள் குறித்து புலம்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகள் கூடுதல் சாகுபடி செய்திருப்பதை தெரிந்ததும், அரசு முன்கூட்டியே கொள்முதலை தொடங்கியிருக்க வேண்டும் என்றும், நெல்மணிகளை பாதுகாக்க எந்த முன்னேற்பாடுகளும் செய்யாதது தமிழக அரசின் தவறு என்றும் சுட்டிக்காட்டினார்.
அதற்கு மாறாக, கொள்முதல் நிலையங்கள் சரிவர இல்லை என்றும், பெரும்பாலனவை தனியாரிடம் உள்ளன என்றும் குற்றம்சாட்டிய நயினார் நாகேந்திரன், இரவு பகல் பாராமல், மழை வெயில் பாராமல் உழைத்து, நெல்லை அறுவடை செய்த மக்கள் தற்போது இழப்பை சந்தித்திருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.
எனவே, இந்த சேதத்திற்கு முழுக் காரணமான தமிழக அரசு, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
















