2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மோகனப்பிரியா சரவணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகிகள் 600 பேர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாஜகவுக்காக என்ன செய்தீர்கள் என்பதை ஒவ்வொரு நிர்வாகியும் எண்ணிப் பார்க்க வேண்டுமென தெரிவித்தார்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது இதுபோன்ற கூட்டங்கள் நடத்த வேண்டுமென கூறிய அவர், வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
















