இந்தியாவைச் சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் என்ஜிஓ நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருதளித்து கௌரவிக்கப்பட உள்ளது.
ஆசியாவில் மக்களுக்குத் தன்னலமற்ற பொதுச்சேவைகள் வழங்குவோரை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ரமோன் மகசேசே விருது அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் 67-ம் ஆண்டாக நடைபெறவுள்ள ரமோன் மகசேசே விருது வழங்கும் விழா, வரும் 7-ம் தேதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு, இந்தாண்டுக்கான ரமோன் மகசேசே விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007-ல் சபீனா ஹூசைன் என்பவரால் தொடங்கப்பட்ட எஜூகேட் கேர்ள்ஸ் நிறுவனத்தின் முயற்சியால் இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களும், சிறுமிகளும் கல்வி பயின்று வாழ்வில் வளம் பெற்றுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ரமோன் மகசேசே விருதுக்குத் தேர்வாகியிருப்பது இதுவே முதன்முறையாகும்
















