முழுநேர சினிமா விமர்சகராக முதலமைச்சர் ஸ்டாலின் மாறிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அண்மையில் வெளியான பைசன் திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், படக்குழுவினரை நேரில் வரவழைத்து பாராட்டினார். இதனை கடுமையாக விமர்சித்துள்ள இபிஎஸ், தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலினின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களை பார்ப்பதிலோ, படக் குழுவினரை பாராட்டுவதிலோ எந்த தவறும் இல்லை என குறிப்பிட்டுள்ள இபிஎஸ், தான் எதற்கு முதலமைச்சர் ஆனோம் என்பதையே மறந்து முழுநேர சினிமா விமர்சகராக ஸ்டாலின் மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார்.
பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டிருந்த முதலமைச்சருக்கு, மழை காலத்தில் மக்களைக் காக்க உரிய நெறிமுறைகளை வகுப்பது பற்றி யோசிக்க நேரம் இருந்ததா? என கேள்வி எழுப்பியுள்ள இபிஎஸ்,
விவசாயிகளின், மக்களின் கண்ணீரை உணராத குடும்ப மன்னராட்சியாளர்களுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என பதிவிட்டுள்ளார்.
















