இத்தாலியில் 5 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 395 பேர் பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளில் என்ன நடக்கிறது? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்?
“ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் பிரச்னை உள்ளது. இந்தக் கொடுமை தொடர்ந்து நடைபெற்றும் வருகிறது. இத்தகைய பாலியல் குற்றங்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன். அத்துடன், இத்தகைய துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நான் தொடர்ச்சியாகப் போராடுவேன்.” 2019ம் ஆண்டு அப்போதைய போப் ஆண்டவராக இருந்த பிரான்சிஸ் தெரிவித்த வார்த்தைகள் இவை.
மதகுருக்களால் கன்னியாஸ்திரிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள்குறித்து போப் ஆண்டவரே இப்படி வெளிப்படையாகப் பேசியது அந்தச் சமயத்தில் முக்கிய விவாதப்பொருளானது. மேலும், கத்தோலிக்க திருச்சபைகளில் நடைபெறும் முறைகேடுகளும், பாலியல் குற்றங்களும் அதிக கவனம் பெறத்தொடங்கின.
அதுகுறித்த பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு, பல பாதிரியர்கள் கைது செய்யப்பட்டனர். சேவ் அவர் சிஸ்டர்ஸ் என்ற பெயரில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இருந்தபோதும், கத்தோலிக்க திருச்சபைகளில் நடைபெறும் பாலியல் சுரண்டல்கள் இன்றுவரை குறையவில்லை என்பதைதான், இத்தாலியில் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
அந்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 4 ஆயிரத்து 400 பேர், பாதிரியார்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக ஆதாரப்பூர்வமாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகள், ஊழியர்கள், சிறுவர்-சிறுமியருக்கு நேரிடும் இன்னல்களை உலகறிய செய்யும் நோக்கத்துடன் இத்தாலியில் Rete l’Abuso என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஃபிரான்செஸ்கோ ஜனார்டி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்ட உதவிகளையும், மருத்துவ மற்றும் மனநல உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த அமைப்பு கடந்த வாரம் பாதிரியார்களுக்கு எதிராகப் புள்ளிவிவரங்களுடன் கூடிய பெரிய குற்றச்சாட்டுப் பட்டியலை வெளியிட்டது.
அதில், 1,250 பாலியல் வழக்குகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 1,106 வழக்குகள் இத்தாலிய பாதிரியார்கள் தொடர்புடையவை. இத்தாலியில் 2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 4 ஆயிரத்து 395 பேர், பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், 11 மாற்றுத்திறனாளிகளும் பாதிப்பைச் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 18 வயதுக்கு குறைவான 4,451 சிறுவர், சிறுமியர்களுக்கும் பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாக வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 1,106 பாதிரியார்கள்மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளபோதும், 76 பேரிடம் மட்டுமே இதுவரை தேவாலய விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்பதையும் Rete l’Abuso அமைப்புச் சுட்டி காட்டியுள்ளது.
17 பாதிரியார்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், ஏழு பேர் வேறு திருச்சபைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான 5 பாதிரியார்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Rete l’Abuso அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை அனைத்து கத்தோலிக்க திருச்சபைகளிலும் புயலை கிளப்பியுள்ளது. தற்போது இத்தாலியில் உள்ள பாதிரியார்கள் மீதான குற்றச்சாட்டு பட்டியல்தான் வெளியாகியுள்ளது. மற்ற நாட்டு திருச்சபைகளில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















