நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, வங்கதேசத்தின் ஜனநாயக முன்னேற்றத்தை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இஸ்லாமிய சார்பு ஆட்சியின் கீழ், ஜனநாயகத்தை கட்டிக் காக்கும் வங்க தேச முப்படைகளையும் அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப் பாட்டு வருகின்றன. இதனால் வங்களதேசத்தின் அரசியல் எதிர்காலம் மட்டுமல்ல, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பும் ஆபத்தில் உள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த மே 13ம் தேதி வங்கதேசத்தில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் மற்றும் அதன் துணை அமைப்புகளையும் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுத் தடை செய்தது. முன்னதாக, கடந்த மே 11ம் தேதி, உலகளவில் தடைசெய்யப்பட்ட ABT அமைப்பின் தலைவரும் நீண்டகால அல்-கொய்தா கூட்டாளியுமான ஜாசிம் உதின் ரஹ்மானியின் தலைமையில் அவாமி லீக் எதிர்ப்பு பேரணி பகிரங்கமாக நடந்தது.
வங்கதேசத்தில் ஹிஸ்புத்-தஹ்ரிர் (HuT) போன்ற பிற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும் ஒரு கலிபாவை உருவாக்க வேண்டும் என்றும், இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெளிப்படையாகக் குரல் கொடுத்து வருகின்றன. இந்தச் சுழலில், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி, அவாமி லீக் உட்பட பல ஜனநாயக அமைப்புகள் வங்கதேசத்தில் தடை செய்யப் பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சியை அந்நாட்டு தேர்தல் ஆணையமும் தடை செய்து பதிவை ரத்து செய்துள்ளது. உலகளவில் தேடப்படும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இப்போது வங்க தேச அரசின் மையமாக உள்ளனர். அதிபரை நீக்கிவிட்டு, அடிப்படைவாத இஸ்லாமிய முகாமில் இருந்து ஒருவரை அதிபராக நியமிக்க முகமது யூனுஸ் திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை எதிர்க்கும் ராணுவத் தளபதி ஜெனரல் வக்கர்-உஸ்-ஜமானுக்கு எதிராக, முப்படைகளையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளையும் யூனுஸ் எடுத்து வருகிறார். இதற்கு, “சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்” (ICT) என்ற அமைப்பைத் தனது ஆயுதமாக யூனுஸ் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அக்டோபர் 22ம் தேதி, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொலைகள், காவல் சித்ரவதைகள் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் 15 உயர் ராணுவ அதிகாரிகளைக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். மேலும், முப்படைகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.
மேலும், யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, பாரம்பரிய இராணுவத்தை ஒழித்து விட்டு, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை போல இஸ்லாமிய அடிப்படைவாத சித்தாந்தத்தில் இயங்கும் “இஸ்லாமிய புரட்சிகர இராணுவத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் உள்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதோடு, எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்துவார்கள் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கெல்லாம், வழிகாட்டுதல் மற்றும் நிதியளிப்பதில் பாகிஸ்தானின் ISI மற்றும் துருக்கியின் தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரமாக ஈடுபடுவதாகப் பல சர்வதேச உளவுத்துறை ஆதாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, ரோஹிங்கியா அகதிகள் முகாம்களுக்குள், சவுதி மற்றும் கட்டாரின் நிதியுதவி பெற்ற “மனிதாபிமான” அமைப்புகள் தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்குவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆயுதக் கடத்தல் மற்றும் பயங்கரவாத பிரசங்கங்களால் நிறைந்த இந்த முகாம்கள், இந்தியாவின் வடகிழக்கு மற்றும் மியான்மரின் ராக்கைன் மாநிலத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் ஜிஹாதி மையங்களாக மாறியுள்ளன. யூனுஸின் ஆலோசகர்கள், தற்போதுள்ள அரசியலமைப்பை மாற்றி இஸ்லாமிய புரட்சிகர அரசை அறிவிக்கும் திட்டங்களைத் தீட்டிவருவதாகக் கூறப்படுகிறது.
வங்கதேசத்தின் புதிய இஸ்லாமிய புரட்சிகர அரசில் , நூற்றுக்கணக்கான ராணுவ உயர் அதிகாரிகளை “துரோகிகள்” என்று முத்திரை குத்தப்பட்டு மரண தண்டனைகள் வழங்கப் படலாம். பயங்கரவாதிகளின் கைகளில் வங்கதேசம் என்பது தெற்காசியாவின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கும்.
இந்தியாவின் வடகிழக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும். சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்ட முயற்சிகளைச் சீர்குலைக்கும். ஆசியான் நாடுகளில் பயங்கரவாத கிளர்ச்சிகள் ஏற்படும். இஸ்தான்புல்லில் இருந்து ஜகார்த்தா வரை அமைதியின்மை உருவாகும்.
மொத்தத்தில், இந்திய-பசிபிக் முழுமையும் பயங்கரவாதத்தால் தாக்கப்படும். வங்கதேசத்தில் குடி கொண்டுள்ள இஸ்லாமிய ராணுவமயமாக்கல் தெற்காசியாவின் பேரழிவுக்கு வழி வகுக்கும் என்று உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.
















