வெளிநாட்டில் வாழும் புலம் பெயர்ந்த இந்தியர்கள் தாயகம் திரும்புமாறு ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியிருக்கிறார். பாரத மாதா உங்களை தேடுகிறாள், வரவேற்கிறாள் என்றும் கூறியிருக்கிறார். அதற்கான காரணம் என்ன. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அமெரிக்காவில் தற்காலிகமாகப் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் H1B விசா கட்டணத்தை அண்மையில் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி, மறைமுகமாக இந்தியர்கள் வருகைக்குத் தடைபோட்டிருந்தார் ட்ரம்ப். அமெரிக்க நிறுவனங்களில் இந்திய மென்பொறியாளர்கள் சேருவதை முடக்கும் அப்பட்டமான முயற்சி இது என்பதை அனைவரும் அறிவர்.
டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவின் மன்ஹாட்டன் இன்ஸ்டிடியூட் அமைப்பின் ஆராய்ச்சியாளர் டேனியர் டி மார்டினோ, தனது ஆய்வு கட்டுரையில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரால், அமெரிக்காவுக்கு அதிக நன்மை கிடைத்திருப்பதாகவும், இது சில முட்டாள்களுக்குப் புரிவதில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த பதிவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இந்திய வம்சாவளியினர் தாங்கள் வசிக்கும் நாடுகளின் வளர்ச்சிக்காக அதிக நிதி பங்களிப்பை வழங்கியிருப்பதை, மார்டினோவின் ஆய்வறிக்கை தெளிவுபடுத்துவதாகக் கூறியுள்ளார்.
இப்படி உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வாழும் இந்தியர்களை ஒரு நாடு ஆதரிக்கவில்லை, வரவேற்கவில்லை என்றால், அந்த நாட்டில் நீங்கள் ஏன் வாழ வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாரத மாதா உங்களை அழைக்கிறாள், உங்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறாள் என்றும் ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டு இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்றும், நாம் ஒன்றிணைந்து, வளமான, வலிமையான, இந்தியாவை கட்டியெழுப்புவோம் என்றும் அழைப்பும் விடுத்துள்ளார்.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்களே ஆதிக்கம் செலுத்துவதாகவும், திறமையாளர்களின் இடப்பெயர்வு அதிகரிப்பது வீழ்ச்சியல்ல, மாற்றத்தைக் குறிப்பதாகவும் ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ளார்.
சிலிகான் பள்ளத்தாக்கில் மட்டும் தொழில்நுட்ப ஊழியர்களில் 25 சதவிகிதம் பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. இதன் காரணமாகவே அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் தொழில்நுட்ப திறன்களை உள்நாட்டில் கட்டியெழுப்புவதற்கு ஷோஹோ நிறுவனர் தொடர்ந்து வாதிட்டு வருகிறார். அண்மையில், தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகிய அவர், தனது நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் தலைமை விஞ்ஞானியாக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
















