ஆசிய இளையோருக்கான கபடி போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த நிலையில், இந்திய அணியைத் துணை கேப்டனாக வழிடத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார் கண்ணகி நகர் கார்த்திகா…. யார் அவர் தற்போது பார்க்கலாம்.
பஹ்ரைன் நாட்டில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்து நிற்கிறது. 18 வயதுக்குட்பட்டோருக்கான கபடி இறுதிப்போட்டியில் ஈரானை 75-க்கு 21 புள்ளிக் கணக்கில் வீழ்த்தித் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய மகளிர் அணி.
இந்திய அணியைத் துணை கேப்டனாக வழிநடத்தியவர் சென்னை கண்ணகி நகர் புயல் கார்த்திகா. ஏழ்மையான குடும்பப் பின்னணியில், வறுமையின் பிடியிலும் இடைவிடாத பயிற்சியால் இந்திய அணியில் இடம்பிடித்த கார்த்திகா, தனது அபாரமான ரைடு மூலம் ஒட்டுமொத்த, ஈரான் அணியைத் தெறிக்க விட்டதோடு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
பஹ்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய கார்த்திகாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் வெற்றியில் கார்த்திகாவின் பங்களிப்பைப் பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார். தங்கம் வென்று திரும்பிய கார்த்திகாவுக்கு கண்ணகி நகர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாகவும் மாலை கிரீடம், பொன்னாடை அணிவிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார் கார்த்திகா. அப்போது வழிநெடுக கண்ணகி நகர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் சூழ்ந்து கார்த்திகாவை கொண்டாடிய விதம், கார்த்திகாவை எப்படி நேசிக்கிறார்கள் என்பதை கண்ணுக்கு எதிரே வெளிப்படுத்தியது.
அப்போது தனது பயிற்சியாளர் ராஜி-க்கு தனது தங்கப்பதக்கத்தை அளித்து மகிழ்ந்தார் கார்த்திகா. கண்ணகி நகர் மக்கள் அனைவரும் தன்னை ஆதரித்ததாகக் கூறிய கில்லி வீராங்கனை கார்த்திகா, கண்ணகி நகரில் இருந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் தனது லட்சியம் என்கிறார் உற்சாகமாக.
2000 ஆண்டில் இருந்து கண்ணகி நகரில் வசிப்பதாகக் கூறிய கார்த்திகாவின் தாயார், 6 வயது முதல் கார்த்திகா கஷ்டப்பட்டு கபடி பயிற்சி பெற்று வருவதாகக் கூறினார்…பெற்றோர்கள் பெண் குழந்தைகளை நம்பி வெளியே அனுப்ப வேண்டும் என்றும், பெற்றோர் அளிக்கும் ஊக்கம்தான் குழந்தைகளுக்கு முக்கியம் என்று கூறுகிறார் கார்த்திகாவின் தாயார் சரண்யா.
அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து வரும் கார்த்திகாவின் வளர்ச்சிக்கு அரசு உதவ வேண்டும் எனக் கண்ணகி நகர் பொதுமக்கள் கூறினர். அதே நேரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கண்ணகி நகர் மக்களுக்கு வேண்டிய அனைத்தும் செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளதாகத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கபடி எக்ஸ்பர்ட் பயிற்சியாளர் கவிதா தெரிவித்துள்ளார்.
கார்த்திகா பயிற்சி செய்யும் மைதானம் மழை காலங்களில் முழுமையாகத் தண்ணீர் சூழ்ந்து விடும், எனவே பயிற்சி மேற்கொள்வதற்கு உரிய இடத்தை அரசு ஏற்படுத்திக் கொடுத்தால், இன்னும் ஆயிரம் கார்த்திகாக்கள் உருவாவார்கள் என்பது கண்ணகி நகர் மக்களின் கோரிக்கை.
கண்ணகி நகர் என்றாலே தவறான பார்வை இருக்கும் நிலையில், அந்தப் பார்வையை மாற்றிப் புது அடையாளம் கொடுத்திருக்கிறார் கார்த்திகா என மெச்சுகின்றனர் கண்ணகி நகர் பொதுமக்கள்.
















