முழு பலத்துடன் நாட்டின் நலன்களைப் பாதுகாக்க எப்போதும் தயாராக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் எல்லையில் மிகப்பெரிய போர்ப்பயிற்சியில் இந்தியா ஈடுபட உள்ளது. இது பாகிஸ்தானுக்கு பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
குஜராத்துக்கும், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்கும் இடையே உள்ள 96 கிலோமீட்டர் நீளமுள்ள சர் கிரீக் பகுதி ஒரு அலை முகத்துவாரம் ஆகும். இந்தச் சதுப்பு நில எல்லைப் பகுதி, பாதுகாப்பு மற்றும் ராணுவ திட்டமிடலுக்கு முக்கியமான பகுதியாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இந்த நீர்வழிப்பாதை குறித்த எல்லை பிரச்னை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
அண்மைக்காலமாக இப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. சர் கிரீக் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறத் துணிந்தால், அதற்கான இந்தியாவின் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும், அது, பாகிஸ்தானின் வரலாறு மற்றும் புவியியலை மாற்றி எழுதும் என்றும் கடந்த வாரம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் எச்சரித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ள சர் கிரீக் பகுதியில் இந்திய முப்படைகள் மிகப்பெரிய போர்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. திரிசூல் என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லையில் அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதிவரை இந்திய முப்படைகளும் ஒருங்கிணைந்த கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபடப் போவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பயிற்சிக்காகக் குறிக்கப்பட்ட வான்வெளி 28,000 அடி உயரம் என்பதே, இதன் முக்கியவத்தை எடுத்துக் காட்டுகிறது. முப்படைகளின் ஒருங்கிணைந்த கூட்டு போர்ப் பயிற்சிகளில் தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆகிய இரண்டு அம்சங்களும் இடம் பெறுகின்றன. சுமார் 20,000 இராணுவ வீரர்கள் பங்கேற்க உள்ள இந்தப் போர்ப் பயிற்சியில், ரஃபேல், சுகோய் போன்ற போர் விமானங்களும், ஏவுகணைகளும், போர்க் கப்பல்களும், முன்னெச்சரிக்கைக்கான புலனாய்வு உளவு அமைப்புகளும் இடம்பெறுகின்றன.
இந்திய முப்படைகளின் ஒருங்கிணைந்த வலிமை மற்றும் தேர்ந்த ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் திரிசூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. படைகளின் வலிமையைக் காட்டுவதோடு, தன்னம்பிக்கை மற்றும் தன்னிறைவு இந்தியாவின் பெருமையையும் இந்தப் போர்ப் பயிற்சி எடுத்துக்காட்டுகிறது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் இந்தியாவின் தனித்துவமான போர் வியூகங்களைப் பயன்படுத்தி, முப்படைகளும் ஒருங்கிணைந்து சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்பதை இந்தத் திரிசூல் போர்ப் பயிற்சியின் மூலம் இந்தியா நிரூபிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
குழுப்பணி மற்றும் தகவல்தொடர்புகளை மேம்படுத்தக் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முப்படைகளும் தாக்குதல்கள், பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள் எனப் போர்க்களப் பயிற்சிகளில் ஈடுபடும் என்று கூறப்பட்டுள்ளன.
தளவாடக் குழுக்களும், வீரர்களும் எரிபொருள், வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை எவ்வளவு விரைவாக முன் வரிசைக்கு நகர்த்த முடியும் என்பதையும் சோதனை செய்யப் படும் என்றும், காயமடைந்த வீரர்களை மீட்பது, சேதமடைந்த அமைப்புகளைச் சரிசெய்வது மற்றும் எதிரிகளின் திடீர் தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றுவது ஆகிய சோதனை பயிற்சிகளும் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடினமான நிலப்பரப்புகளில் போராடும் திறனைச் சோதிக்கும் பயிற்சிகள், சிற்றோடை மற்றும் பாலைவனப் பகுதிகளில் எதிர்தாக்குதல் நடவடிக்கைகள், சவுராஷ்டிரா கடற்கரையில் மிகவும் சிரமமான விமானப்படை பயிற்சிகள், தரை, கடல் மற்றும் வான் ஆகிய மூன்று இடங்களிலும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்த பல்வேறு போர்க் கள உத்திகள் என நிஜப் போருக்கான முழு அளவிலான ஒத்திகையாக இந்தத் திரிசூல் போர்ப் பயிற்சிகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
போருக்குத் தயாராக இருக்கவும், பலவீனங்களை அடையாளம் காணவும், எந்தவொரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும் விரைவாகவும் தீர்க்கமாகவும் பதிலளிக்கவும் இந்திய முப்படைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் இந்தப் போர்ப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் உறுதியளிக்கும் விதமாக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தத் திரிசூல் போர்ப் பயிற்சி என்பது அணுகுண்டு மிரட்டல் விடும் பாகிஸ்தானுக்கான இந்தியாவின் தெளிவான எச்சரிக்கையாகும். அதனால், அச்சம் கொண்ட பாகிஸ்தான், திரிசூல் போர் பயிற்சியின் அறிவிப்பு வந்தவுடன், மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களின் பல விமான வழித்தடங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் NOTAM (Notice to Airmen) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
















