அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகவும், பிரசாரத்துக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க உத்தரவிட கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், பொது சொத்துக்களின் சேதத்துக்கு இழப்பீடு வசூலிப்பது குறித்து விதிகள் வகுக்கத் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு விதிமுறைகளை வகுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த அனைத்து வழக்குகளும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், அனைத்து கட்சிகளுக்கும் முன்கூட்டியே அனுமதி வழங்க வேண்டும் என்றும், வழிகாட்டு விதிமுறைகள் வகுக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், 10 நாட்களில் வழிகாட்டு விதிமுறைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதேசமயம், நெடுஞ்சாலைகள் தவிர பிற இடங்களில் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்களைப் பரிசீலிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது என்றும், கூட்டங்களுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது குறித்த காலத்தில் முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.
















