பாஜக மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் இருந்து
முகமது ஹனீபாவை விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
2011ல் மதுரையில் ரத யாத்திரை மேற்கொண்ட பாஜக மூத்த தலைவர் அத்வானியை குண்டு வைத்து கொல்ல முயன்ற வழக்கில் தென்காசியைச் சேர்ந்த முகமது ஹனிபா என்பவர் 2013ல் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார்.
ஹனீபா மீதான வழக்கை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவரை விடுவித்து உத்தரவிட்டது. திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பு மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எல்.விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், அத்வானியை கொல்ல முயன்றது மிகக் கடுமையான குற்றம் என்றும், கீழமை நீதிமன்றம் அளித்த விடுதலை உத்தரவு தவறானது என தெரிவித்தனர்.
இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றம் கடுமையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். திண்டுக்கல் நீதிமன்றம் வழங்கிய விடுதலை உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், தண்டனை விதிக்கும் முன் ஹனிபாவிடம் கேள்வி எழுப்ப தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.மேலும், முகமது ஹனிபா இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















