காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதிய நிலையில், 3 நிபுணர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்தது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். நெல் குவியலை அள்ளி ஈரத்தன்மையை அறிந்த அதிகாரிகள், ஆய்வகத்தில் சோதனை செய்வதற்காக 3 வகையான நெல் மாதிரிகளை எடுத்து சென்றனர்.
இதேபோல் சீர்காழி அடுத்த பழைய பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பி.கே.சிங் தலைமையிலான மத்திய குழுவினர் நெல்மணிகளின் சேதங்களை பதிவு செய்து கொண்டு, நெல்லின் தன்மை மற்றும் ரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து நெல்லின் தரம் மற்றும் ஈரப்பத அளவு குறித்து இயந்திரத்தின் மூலம் மத்திய குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கந்தமங்கலம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பி.கே.சிங் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது நெல்மணிகளின் சேதங்களை பதிவு செய்து கொண்ட குழுவினர் நெல்லின் தன்மை, அதன் ரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை வாடிப்பட்டி அருகேயுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கட்டக்குளம், ஆண்டிபட்டி, போடிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு வருகை தந்த குழுவினர், குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்லின் ஈரத்தன்மையை ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து ஆய்வகத்தில் சோதனை செய்வதற்காக நெல் மாதிரிகளை எடுத்து சென்றனர். அப்போது, நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தி கொள்முதல் செய்ய மத்திய குழுவினரிடம் பெண்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
















