பள்ளிக்கரணை சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், உலக அளவில் ராம்சார் தளமாக அங்கீகரிக்கப்பட்டு மத்திய மற்றும் மாநில அரசுகளால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக விளங்கி வரும் பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் உள்ள 14.7 ஏக்கர் நிலத்தில், ரூ. 2000 கோடி மதிப்பீட்டில் ஆயிரக்கணக்கான வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு திமுக அரசு. அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இத்தகைய சட்ட விதிமீறல் கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு பருவமழையின் போதும் வெள்ளக்காடாக மாறும் சென்னையைப் பாதுகாக்கும் தடுப்புச் சுவராக விளங்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் கட்டடங்கள் கொண்டு துளையிட திமுக அரசுக்கு மனசாட்சி உறுத்தவில்லையா? ஆட்சி முடிவதற்குள் தலைநகரை மொத்தமாகத் தலைமுழுகிட வேண்டும் என நினைக்கிறதா ஆளும் அரசு? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுவும் சென்னையில் வீடுகட்ட விரும்பும் சராசரி பொதுமக்களுக்கு ஏகப்பட்ட குடைச்சல்களைக் கொடுத்து. லஞ்சங்களால் வதைத்து. அங்கே இங்கே என அவர்களை அலைக்கழிக்கும் அரசு அதிகாரிகள் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு மட்டும் இத்தனை எளிதாக அனுமதி அளித்தது எப்படி?
தமிழக சுற்றுச்சூழல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, சிஎம்டிஏ உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளும் சட்டத்தை மீறி போர்க்கால அடிப்படையில் இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளித்ததன் பின்னணியில் எத்தனை கோடிகள் கைமாறின? என்றும் அவர் வினவியுள்ளார்.
சரியான நேரத்தில் அரசு நெல் கொள்முதல் செய்யாததால் பல மெட்ரிக் டன் நெற்பயிர்கள் முளைப்பு கட்டி கிடக்கிறது. முறையான மழைநீர் வடிகால் பணிகளை அரசு மேற்கொள்ளத் தவறியதால் தமிழகமே வெள்ளத்தில் மிதக்கிறது. ஆனால் திமுக அரசோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் தமிழகத்தின் சுற்றுச்சூழலை அடகுவைத்து கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா? என்றும் அவர் கூறியுள்ளார்.
பல்லுயிர் பெருக்கத்தினைப் பாதுகாக்கும் ஈரநிலங்களைக் கூட மனசாட்சியின்றி ஆக்கிரமிக்குமளவிற்கு ஆளும் அரசின் ஆணவம் அதிகரித்துள்ளது அழிவிற்கான அறிகுறி. அடுத்த முறை அரியணை ஏற முடியாது என்பதை உணர்ந்த திமுக, ஆட்சிக் காலம் முடிவதற்குள் கிடைப்பதை சுருட்டிக் கொள்ளலாம் என்ற பதற்றத்தில் மடத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதைத் தமிழக பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
எனவே, உடனடியாகப் பள்ளிக்கரணை சதுப்பு நில அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்திற்கான சட்டவிரோத அனுமதியை அரசு ரத்து செய்ய வேண்டும். அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலப்பகுதியில் கட்டடம் கட்டுவதற்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கிய அத்தனை அரசு அதிகாரிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இல்லையேல், மாண்புமிகு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு. பூபேந்திர யாதவ் அவர்களை நேரில் சந்தித்துப் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தமிழக பாஜக வலியுறுத்துவதோடு. தமிழகம் முழுவதிலும் பெரும் போராட்டங்களையும் நாங்கள் முன்னெடுப்போம் என நயினார் நாகேந்திரன் எச்சரிகைக விடுத்துள்ளார்.
















