உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலின் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. கோயிலின் 6 தனிச் சன்னதிகள் ஏழு மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களும் நிறைவடைந்து விட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரதான கோயில் வளாகத்துடன், சிவபெருமான், விநாயகர், அனுமன், சூரியதேவன், பகவதி தேவி, அன்னபூரணி தேவி ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆறு தனிச் சன்னதிகளின் பணிகளும் முடிவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சன்னதிகளில் கொடிக் கம்பங்களும், கலசங்களும் நிறுவப்பட்டுள்ளதாக அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக கோயில் நிர்வாகமான ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அதேபோல் வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்ரர், அகஸ்தியர், நிஷாத்ராஜ், சபரி மற்றும் தேவி அஹில்யா ஆகியோரை கௌரவிக்கும் ஏழு மண்டபங்களின் பணிகளும் நிறைவடைந்து விட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
ஜடாயு மற்றும் அணில் சிலைகளும் கோயில் வளாகத்திற்குள் நிறுவப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
















