வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்தது.
மோந்தா புயல் கரையை கடந்த போது ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்களும் சேதமடைந்ததால் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டன.
மோந்தா புயல் காரணமாக கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், மக்கள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அத்தியாவசிய பொருட்களை வாங்க சிலர் வெளியில் வந்தபோது சூறைக்காற்று வீசயதால், அவர்கள் தட்டு தடுமாறி வாகனங்களை இயக்கினர்.
இதனிடையே, ஆந்திராவின் ஸ்ரீகுலம் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பகுடா கால்வாய் நடுவே அமைந்துள்ள சிவன் சிலை பாதியளவு தண்ணீரில் மூழ்கியது. இதனைத்தொடர்ந்து, பக்தர்கள் அந்த பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதனிடையே, மோந்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தலைமை செயலகத்தில் இருந்தவாறு ஆய்வு செய்தார். மக்கள் சிரமங்களை சந்திக்காமல் இருக்க, சீரமைப்பு பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
















