பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற உள்ளன. இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் எப்படி நடைபெறும் என்பது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த 1951ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டுவரை 8 முறை வாக்காள்ர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவான நகரமயமாக்கல், மக்கள் இடப்பெயர்வு, இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெறுவது ஆகியவை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் அவசியத்தை உணர்த்துகிறது
. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அதாவது ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வட்டார நிலை அலுவலர், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை மேற்கொள்வார்.
வீடுவிடாகச் சென்று படிவங்களை வழங்கிப் பூர்த்தி செய்து திரும்பப் பெறும் பணியைச் செய்யும் வட்டார நிலை அலுவலர், ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் மூன்று முறை வந்து தகவலைச் சேகரிப்பார்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்போது 18வயது நிரம்பிய வாக்காளர்கள் பட்டியலில் இணைக்கப்படுவதோடு, தகுதியில்லாத, இறந்த, இரட்டைப்பதிவு பெற்ற வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்.
திருத்தப் பணியின்போது ஆதார் அட்டை, அடையாள அட்டையாக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், குடியுரிமை மற்றும் பிறந்த தேதிக்கான சான்றாக எடுத்துக் கொள்ளப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறும் உத்தரவு, கடவுச்சீட்டு, கல்லூரி அல்லது பல்கலைக்கழக பட்ட சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகிய ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.
நவம்பர் 4ம் தேதி தொடங்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிசம்பர் 4ம் தேதிவரை நடைபெற உள்ளன. டிசம்பர் 9ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதிவரை வாக்காளர்களின் ஆட்சேபனை மீதான விசாரணை மற்றும் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும்.
பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.
















