இந்தியா தனது முதல் கூட்டுறவு டாக்சி சேவையாக ‘பாரத் டாக்சி’-யை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓட்டுநர்களுக்கு முழு வருமான உரிமையையும், பயணிகளுக்கு நியாயமான கட்டணத்துடன் நம்பகமான சேவையையும் வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், UBER மற்றும் OLA-வுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
இந்தியாவின் முதல் கூட்டுறவு டாக்சி சேவையான “பாரத் டாக்சி”, UBER, OLA போன்ற தனியார் டாக்சி நிறுவனங்களுக்கு நேரடி போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தேசிய மின்ஆட்சி பிரிவு (NeGD) இணைந்து உருவாக்கியுள்ள இந்தச் சேவை, ஓட்டுநர்களுக்குப் பங்குதாரர் என்ற உரிமையையும், 100 சதவீத வருமானத்தையும் வழங்குகிறது.
அதேபோல, பயணிகளுக்கு நியாயமான, நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுடன் நம்பகமான சேவையும் பாரத் டாக்சி மூலம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. DIGILOCKER, UMANG போன்ற தேசிய தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ள பாரத் டாக்சி, வரும் நவம்பரில் டெல்லியில் தொடங்கப்பட்டு பின்னர் 20 நகரங்களில் விரிவடையவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் பாரத் டாக்சியில் ஓட்டுநர்கள் கூட்டுறவு உறுப்பினர்களாகவும், பங்குதாரர்களாகவும் சேர முடியும். தனியார் நிறுவனங்களைப் போலப் பெரிய அளவில் கட்டண விகிதம் பெறப்படமாட்டாது என்பதால், ஓட்டுநர்கள் தங்கள் வருமானத்தில் இருந்து எந்தவித கமிஷனையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
பாரத் டாக்சி சேவையில் நியாயமான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கட்டண சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாலும், அதிக தேவை காலங்களிலும் இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என்பதாலும், பயணிகள் மத்தியில் இது வெளிப்படைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோலத் தேசிய டிஜிட்டல் தளங்களுடன் பாரத் டாக்சி சேவை இணைக்கப்பட்டுள்ளதால், அடையாள சரிபார்ப்பு மற்றும் சேவை வழங்குதல் எளிமையாக இருக்கும் எனத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் தொடங்கவுள்ள இந்தத் திட்டத்தில் சாரதி என்ற பெயரில் முதற்கட்டமாக, 5 ஆயிரம் ஆண் மற்றும் பெண் ஓட்டுநர்கள் இணைக்கப்படவுள்ளனர். அடுத்தகட்டமாக மும்பை, புனே, போபால், லக்னோ, ஜெய்பூர் உள்ளிட்ட 20 நகரங்களுக்கு இந்தச் சேவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியால் டாக்சி ஓட்டுநர்கள் தங்கள் தொழிலுக்கான உரிமையை முழுமையாகப் பெறவும், பயணிகள் மலிவு விலையில் பயணங்களை மேற்கொண்டு பயனடையவும் மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.
















