பாகிஸ்தானின் தீவிரவாத வலையமைப்புடன் தொடர்புடைய இப்திசாம் இலாஹி ஜாஹீர் வங்கதேசத்தில் சுதந்திரமாகச் செயல்படுவது, இந்தியாவின் கிழக்கு எல்லை பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹஃபீஸ் சயீதின் நெருங்கிய கூட்டாளியான இப்திசாம் இலாஹி ஜாஹீர், வங்கதேசத்தில் சுதந்திரமாகச் செயல்பட்டு வருவதாகத் தகவல் வெளியானதையடுத்து, இந்தியாவின் கிழக்கு எல்லையில் புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மர்காசி ஜமியத் அஹல்-இ-ஹதீத் இயக்கத்தின் பொதுச்செயலாளரான ஜாஹீர், கடந்த 25-ம் தேதி முதல் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள ராஜ்ஷாஹி, சபினவாப்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் அங்கு மத தீவிரவாத கருத்துக்களை ஊக்குவிக்கும் வகையில் பொதுக்கூட்டங்களை நடத்தி உரையாற்றும் வீடியோக்கள் அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதில் ஜாஹீர், “இஸ்லாமுக்காக உங்களையும், உங்கள் குழந்தைகளையும் பலியிடத் தயாராக இருங்கள்… பாகிஸ்தான் முதல் வங்கதேசம் வரை இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து மதசார்பற்ற சக்திகளுக்கு எதிராக நிற்க வேண்டும்.” போன்ற கருத்துக்களை பேசியதோடு, இந்திய பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் “ஒருநாள் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்காமல் விடமாட்டோம்” எனச் சூளுரைத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜாஹீரின் இந்தப் பேச்சுக்கள் வடக்கு வங்கதேச எல்லைகளில், தீவிரவாத சிந்தனைகளை விதைப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சியாக இருக்கலாம் என இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் எச்சரித்துள்ளன. டாக்காவில் உள்ள நிப்ராஸ் சர்வதேச பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சி உட்பட சலபி அமைப்புகளின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஜாஹீர் பங்கேற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், வங்கதேச இடைக்கால அரசு இதுகுறித்து எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடாமல் இருப்பது இந்திய புலனாய்வு பிரிவுகளுக்குப் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஷேக் ஹசினா அரசு வீழ்த்தப்பட்ட பின் பொறுப்பேற்ற முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு மத அடிப்படைவாத குழுக்களுக்கு மீண்டும் இடமளித்து வருவதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
லஷ்கர் நிறுவனர் ஹஃபீஸ் சயீத், இணை நிறுவனர் அமீர் ஹம்சா, கொல்லப்பட்ட லஷ்கர் கமாண்டர் அப்துல் ரஹ்மான் மக்கி ஆகியோருடன் கடந்த 24 ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பில் இருந்து வரும் ஜாஹீர், அஹ்லே ஹதீத் இயக்கம் வழியாகச் சலபி தீவிரவாதத்தை பரப்பி, அதன் மூலம் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு வலையமைப்பை உருவாக்கியுள்ளார்.
அத்துடன், இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற ஜாகிர் நாயக்குடனும், ஜாஹீர் கடந்தாண்டு சந்திப்பை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உறவுகள் பாகிஸ்தான் – வங்கதேசம் இடையே தீவிரவாத வலையமைப்புகளை வலுப்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாகப் பாதுகாப்புத்துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இப்திசாம் இலாஹி ஜாஹீரின் இந்த வங்கதேச பயணம் தெற்காசிய பிராந்தியத்தின் அமைதி மற்றும் கிழக்கு இந்திய எல்லை பாதுகாப்புக்கு பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், அவர்களின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















