செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை இயக்க உதவும் வகையில் அணுசக்தி, ஆற்றல், தேசிய பாதுகாப்பு மற்றும் புற்றுநோய் சிகிச்சையை இலக்காகக் கொண்ட இரண்டு சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஏற்கெனவே, முதன்முறையாக NVIDIA -AI சூப்பர் கம்ப்யூட்டர்களை முழுவதுமாக அமெரிக்காவில் தயாரிப்பதாக NVIDIA நிறுவனம் அறிவித்திருந்தது அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள AI உள்கட்டமைப்பை உருவாக்கப் போவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்க எரிசக்தித் துறை 1 பில்லியன் டாலர் மதிப்பில் இரண்டு சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்க உள்ளது.அதற்காக, உலகின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான AMD உடன் ஒப்பந்தமாகி உள்ளது.
மிகப்பெரிய அளவில் கணினி சக்தி தேவைப்படும் துறைகளில் முன்னேற்றங்களை மேம்படுத்துவதே இதன் குறிக்கோள் ஆகும். தீவிர நிலைமைகளின் கீழ் பிளாஸ்மாவை சுருக்குவதன் மூலம் இணைவை நகலெடுப்பதை விஞ்ஞானிகள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தச் சூப்பர் கம்ப்யூட்டர்கள், விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளை வேகப்படுத்தும் என்றும், அமெரிக்க அணு ஆயுதக் களஞ்சியத்தை நிர்வகிக்கவும் மூலக்கூறு மட்டத்தில் புற்றுநோய் சிகிச்சைகளை உருவகப்படுத்தவும் உதவும் என்றும் அமெரிக்க எரிசக்தி துறை செயலாளர் கிறிஸ் ரைட் மற்றும் AMD நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி லிசா சூ தெரிவித்துள்ளனர்.
AMD நிறுவனத்துடன் மட்டுமில்லாமல், HPE உடன் இணைந்து, புதிய திறனை முன்பை விட வேகமாக ஆன்லைனில் கொண்டு வருவதாகவும், பகிரப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தேசிய பலமாக மாற்றுவதாகவும் கிறிஸ் ரைட் கூறியுள்ளார். முதல் சூப்பர் கம்ப்யூட்டரான லக்ஸ், AMD, Hewlett Packard Enterprise, Oracle Cloud Infrastructure மற்றும் Oak Ridge National Laboratory ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்படுகிறது.
லக்ஸ் சூப்பர் கம்ப்யூட்டர் தற்போதைய சூப்பர் கம்ப்யூட்டர்களின் AI திறனை விட மூன்று மடங்கு அதிக திறனைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. லக்ஸ் சூப்பர் கம்ப்யூட்டர், அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும் என்றும், அது AMD-ன் MI355X செயற்கை நுண்ணறிவு சிப்-களை களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றும், AMD தயாரித்த CPUகள் மற்றும் நெட்வொர்க்கிங் வன்பொருளுடன் இயங்கும் என்றும் கூறப் பட்டுள்ளது. இரண்டாவது சூப்பர் கம்ப்யூட்டரான டிஸ்கவரி, 2029 ஆம் ஆண்டுச் செயல்பாட்டுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
AMD யின் MI430 தொடர் AI சிப்-களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் இந்தச் சூப்பர் கம்ப்யூட்டர் அமெரிக்க எரிசக்தி தொழில்துறை AI செயல் திட்டங்களில் முதன்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. குறிப்பாக, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அணுக்கரு இணைவு ஆற்றலை உற்பத்தி செய்யவும், அமெரிக்க அணு ஆயுதக் கிடங்கை நிர்வகிக்கவும், பாதுகாப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் அடுத்த 8 ஆண்டுகளில் அபாயகரமான புற்றுநோய்களுக்கான பூரணச் சிகிச்சைக்குச் சிறந்த மருந்தைக் கண்டுபிடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க எரிசக்தி துறையின் Oak Ridge National Laboratory கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தின் தாயகம் என்று கூறப்படுகிறது. இந்தத் தேசிய ஆய்வகம், பல ஆண்டுகளாகவே, விஞ்ஞானிகளுக்குத் தங்கள் ஆய்வுகளில் ஏற்படும் சிக்கல்களை விரைவில் தீர்வளிக்கும் பல சூப்பர் கம்ப்யூட்டர்களை வடிவமைத்துள்ளன.
2004ம் ஆண்டு முதல் மொத்தம் ஏழு முதன்மை சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, ஜாகுவார், டைட்டன், சம்மிட் மற்றும் ஃபிரான்டியர் ஆகிய கடைசி நான்கு சூப்பர் கம்ப்யூட்டர்கள், சமகாலத்தில் மிக முக்கியமான சவால்களை எதிர்கொள்ள உதவி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
















