பாகிஸ்தான் ராணுவத்தின் கொடுமைகளைக் கடுமையாக விமர்சித்ததுடன், இந்தியாவுக்கு ஆதரவு அளிப்போம் எனக் குரல் எழுப்பிய மதகுரு மௌலவி குல்சார் அந்நாட்டு புலனாய்வு அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் மெர்தான் பகுதியைச் சேர்ந்தவர் மதகுருவான மௌலவி குல்சார். இவர் அண்மையில் நிகழ்த்திய உரையில் இந்துக்கள் ஒருபோதும் தங்களை கொடுமைப்படுத்தியதில்லை எனவும், பாகிஸ்தான் ராணுவம் தங்களை சிறையில் அடைத்தபோது அளித்த கொடுமைகள் அளவில்லாதது என்றும் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன் இந்தியா பாகிஸ்தானை தாக்கும் பட்சத்தில் தாங்கள் இந்தியாவை ஆதரிப்போம் என குர்ஆனில் சத்தியம் செய்துள்ளதாகக் கூறிய அவர், இந்திய ராணுவத்தை ஒப்பிட்டுப் பாகிஸ்தான் ராணுவத்தை பல வகைகளில் விமர்சித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த உரையை நிகழ்த்திய பின் அவர் அந்நாட்டு புலனாய்வு அமைப்புகளால் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், அந்நாட்டு அதிகாரிகள் மௌலவி குல்சாரின் கைதை உறுதிப்படுத்தவோ, அவரது வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து கருத்து தெரிவிக்கவோ இல்லை.
பாகிஸ்தான் அரசின் ஆதிக்கம் குறைந்து வரும் கைபர் பகுதியைச் சேர்ந்த மதகுருவின் இந்த நேரடி எதிர்ப்பு, அந்நாட்டில் ராணுவ செல்வாக்கு குறைந்து வருவதையும், மக்கள் அதிருப்தியின் உச்சாணிக்கொம்பில் இருப்பதையும் அடிக்கோடிட்டு காட்டுவதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
















