தமிழக அரசு அண்மையில் அறிமுகப்படுத்திய மின்சாரப் பேருந்துகளின் மூலம் மாதத்திற்கு சுமார் 22 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்படுவதாகப் புகார் எழுந்திருக்கிறது. மின்சாரப் பேருந்துகளைத் தனியார் வசம் ஒப்படைத்ததே நஷ்டத்திற்கு முக்கிய காரணம் எனத் தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் தமிழக போக்குவரத்துத்துறையின் மூலம் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தான் இந்த மின்சாரப் பேருந்துகள் திட்டம். ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்போடு நடப்பாண்டில் மின்சாரப் பேருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் முதன்முதலாக மின்சாரப் பேருந்துகள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையின் வியாசர்பாடி, பெரும்பாக்கம் பணிமனைகளில் இருந்து மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் சுமார் 200க்கும் அதிகமான மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி உள்ளிட்ட பணிமனைகளில் இருந்தும் மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கியுள்ள நிலையில், செலவு அதிகரிப்பதோடு, அடிக்கடி பேருந்துகள் பழுதாகி நிற்பதால் இத்திட்டம் தோல்வி அடைந்திருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. ஒப்பந்த அடிப்படையில் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் மின்சாரப் பேருந்துகளுக்கு நாள் வாடகை கணக்கில் குறிப்பிட்ட தொகையை வழங்கும் மாநகர போக்குவரத்துக் கழகம், பேருந்தின் மூலம் வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணத்தைக் கணக்கு பார்த்துப் பெற்றுக் கொள்கிறது.
அவ்வாறு மாநகர போக்குவரத்துக் கழகம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் வாடகைத் தொகையைவிட அப்பேருந்துகளின் மூலம் வசூலாகும் டிக்கெட் கட்டணம் மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் சென்னையில் இயங்கும் 500க்கும் அதிகமான பேருந்துகளின் மூலம் மாதம் 22 கோடி ரூபாய் அளவுக்குப் போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதோடு, பேருந்து அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக வாங்கப்பட்டாலும் அதனை இயக்குபவரும், ஓட்டுநரும் தனியார் மூலமாகவே நியமிக்கப்படுவதும் செலவு அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது.
போக்குவரத்துத்துறை என்பது லாப, நஷ்டம் இல்லாமல் மக்கள் நலனுக்காக இயங்க வேண்டிய துறை தான் என்றாலும், தனியார் மயமாக்கி அதன் மூலம் செயற்கையான நஷ்டத்தை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
















