திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன், அமலாக்கத்துறை பழைய வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.
நகராட்சி நிர்வாக துறையில் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.
இந்த கடிதத்திற்கு விளக்கமளிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நகராட்சி துறை பணியிடங்களுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வெழுதி வெளிப்படையாக முடிவுகள் அறிவிக்கப்பட்டதாகவும், கடந்தாண்டு தேர்வில் மட்டும் தவறுகள் நிகழ்ந்துள்ளன என்பது நகைப்புக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக பணிபுரிந்து வரும் நிலையில், திமுக அரசுக்கு களங்கம் கற்பிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய அமைச்சர் கே.என்.நேரு, அமலாக்கத்துறையின் முயற்சியை முறியடிக்க சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
















