நீருக்கடியில் அணுசக்தியால் இயங்கும் அதிநவீன ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் உலக அரங்கில் தனது ராணுவ பலத்தை காட்டுவதற்காக ரஷ்யா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இத்தகைய சூழலில், அணுசக்தி ஏவுகணையான புரெவெஸ்ட்னிக் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிபர் புதின் அண்மையில் தெரிவித்து இருந்தார்.
இந்த அணுசக்தி ஏவுகணை சோதனை தேவையில்லாதது என டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஷ்யா மீண்டும் ஒரு அதிநவீன சோதனையை மேற்கொண்டுள்ளது.
அதன்படி நீருக்கடியில் அணுசக்தியால் இயங்கும் அதிநவீன ட்ரோன் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டதாக புதின் தெரிவித்துள்ளார்.
Poseidon என்ற இந்த ட்ரோன் வேகத்திலும், நீருக்கடியில் செல்லும் ஆற்றலிலும் ஒப்பில்லாதது என அவர் தெரிவித்துள்ளார். இந்த ட்ரோனை தடுக்க எந்த வழியும் இல்லை என்றும் புதின் கூறியுள்ளார்.
















