கரூர் விவகாரத்தில் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினர், மனுக்களை வாபஸ் பெற வலியுறுத்தி மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்டவர் உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார்.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதனடிப்படையில் வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதில் ஒரு மனுதாரரான பிரபாகரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதன் விசாரணையில் ஆஜரான அவரது தரப்பு வழக்கறிஞர், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினர், சிபிஐ விசாரணை கோரிய மனுவை திரும்ப பெறக்கோரி மிரட்டுவதாக தெரிவித்தார்.
எனவே இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தேவைப்படுவதாகவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, எந்தவொரு அழுத்தமாக இருந்தாலும் சிபிஐ முன்பு முறையிடுங்கள் என அறிவுறுத்தி, இந்த விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணை டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்தார்.
















