பச்சைவாழியம்மன் கோவிலைக் கையகப்படுத்தும் திட்டத்தைத் திமுக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையால் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்துப் போராடிய மக்களை வலுக்கட்டாயமாக திமுக அரசின் ஏவல்துறை கைது செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
பல்லாண்டுகாலமாகப் பல சமுதாய மக்களின் குலதெய்வமாகத் திகழ்ந்து, நல்லமுறையில் பராமரிக்கப்படும் கோவிலைத் திடீரென அரசு கையகப்படுத்துவது ஏன் எனும் கேள்வி பக்தர்கள் மனதில் எழுந்துள்ளது.
சொந்த அரசியல் ஆதாயத்திற்காகவும், கோவில் சொத்துகளை அபகரிப்பதற்காகவுமே இக்கோவில் ஆக்கிரமிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து அரசுத் தரப்பில் எந்தவொரு விளக்கமும் கொடுக்கப்படாதது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. எனவே, பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உடனடியாக விளக்கமளித்துப் பக்தர்கள் குழப்பத்தைத் தீர்க்க வேண்டும்.
மேலும், திருக்கோவிலை ஆக்கிரமிக்கும் திட்டம் ஏதேனும் இருந்தால் அதனைக் கைவிட வேண்டும் எனத் திருக்கோவில் பக்தர்கள் சார்பாகவும் தமிழக பாஜக சார்பாகவும் கேட்டுக் கொள்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
















