அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவித்துள்ள நிலையில், அதிக சுங்க வரிகளால் சிரமப்பட்டு வந்த இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது. அதே நேரத்தில் டிரம்பின் விவகாரமான வர்த்தக கொள்கைகளை மனதில் வைத்து அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை இந்தியா கூடுதல் எச்சரிக்கையுடன் அணுகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரிவாக விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.
தென்கொரியாவின் க்யோங்ஜூவில் நடைபெற்ற ஏபெக் தலைமை செயல் அதிகாரிகள் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார். அப்போது பேசிய டிரம்ப், பிரதமர் மோடியை தான் மிகவும் மதிப்பதாகவும், விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது என்றும் அறிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பு 50 சதவீத வரிச்சுமையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த இந்திய வணிகர்களின் மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுடனான இந்தப் புதிய வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியா மீதான சுங்க வரிகள் 15 சதவீதம் வரை குறைக்கப்படலாமென தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது இந்தியாவின் மருந்துத் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு உள்ளிட்ட துறைகளுக்குப் பெரிய ஆதரவாக அமையும் எனவும், அமெரிக்க சந்தையில் மீண்டும் போட்டித்தன்மையை பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், அதிபர் டிரம்பின் வர்த்தக கொள்கைகள் பெரும்பாலும் கணிக்க முடியாததாக இருந்துள்ளது. அவர் சுங்க வரிகளை பொருளாதார கருவியாக மட்டுமின்றி, அரசியல் ரீதியாக வெளிநாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கப் பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக அவர் இந்தியா மீதான சுங்க வரியை அதிகரித்தார். அத்துடன் இந்தியா – பாகிஸ்தான் போரை சுங்க வரி மிரட்டலின் மூலம் நிறுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார்.
இவை அனைத்தும் வர்த்தக ஒப்பந்தங்களைக் கூட அதிபர் டிரம்ப் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தலாம் என்பதை காட்டுவதால் அவரது அறிவிப்பு ஒருவித கவலையையும் எழுப்பியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் அமெரிக்காவுடனான ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது, எதிர்காலத்தில் புதிய சுங்க வரிகள் விதிக்கப்படமாட்டாது என்ற உறுதியை பெறுவது இந்தியாவிற்கு அவசியமாகிறது.
இதனை மனதில் வைத்தே ஒப்பந்தத்தில் பாதுகாப்பு விதி ஒன்றை சேர்க்குமாறு இந்தியா கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பின் புதிய சுங்க வரிகள் விதிக்கப்படும் பட்சத்தில் இருதரப்பும் அதனை மறுபரிசீலணை செய்யவோ அல்லது உரிய இழப்பீடு வழங்கவோ வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய ஏற்பாடுகள் உலகளாவிய வர்த்தக ஒப்பந்தங்களில் வழக்கமானவை என்றாலும், இது தற்போதைய சூழலில் தொழில் முதலீட்டாளர்களுக்கு நீண்டகால நம்பிக்கையை வழங்க வல்லதாகப் பார்க்கப்படுகிறது.
மற்றொருபுறம் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தின் பிறகும் அதிபர் டிரம்ப் புதிய சுங்க வரிகளை விதித்திருக்கும் நிலையில், எழுத்துப்பூர்வ உடன்பாடுகளும் அவரின் மாற்றமுள்ள வர்த்தக கொள்கைகளை முழுமையாகத் தடுக்காது என்பதை இந்தியா உணர்ந்து செயல்படும் என வெளியுறவுத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், இந்தியா – அமெரிக்கா இடையேயான வருங்கால ஒப்பந்தம் இருநாடுகளின் வர்த்தக உறவில் ஒரு புதிய உயிர் ஊட்டக்கூடிய முன்னேற்றமாகப் பார்க்கப்பட்டாலும், டிரம்பின் தனித்துவமான எதிர்பார்க்க முடியாத வர்த்தக கொள்கை முடிவுகள் அமெரிக்க சந்தையில் இந்தியாவுக்கு பெரும் சவாலாக விளக்கும் என்பதையும் மறுக்க முடியாது.
 
			 
                    















