நீதிமன்றத்தை அரசியல் மேடையாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனப் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு மாறாக 3 புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
புதிய சட்டங்களை ரத்து செய்யக்கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், மூன்று சட்டங்களை நிறைவேற்றும்போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், நாடாளுமன்றத்தில் அவசர கதியில் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.
இதனைக் கேட்ட தலைமை நீதிபதி, போதுமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லை என்ற காரணங்களைக் கூறி சட்டங்களை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
சட்டம் இயற்றும் தகுதியை எதிர்க்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், இது சம்பந்தமான தீர்ப்புகள் ஏதும் இருந்தால் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.
அப்போது திமுக தரப்பில், சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கில் இடையீட்டு மனுவை ஏற்க முடியாது என்றும், வேண்டுமென்றால் தனி மனுவாகத் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவித்தனர்.
மேலும், இந்த நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்குகளின் விசாரணையை நவம்பர் மூன்றாம் வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.
















