ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பணிகள் முழுமை பெறாத நிலையில் மேம்பாலம் அவசர அவசரமாகத் திறக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பூட்டுத்தாக்கு பகுதியில், சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், பணிகள் முழுமையாக நிறைவு பெறாத நிலையில், மேம்பாலம் அவசர அவசரமாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகனங்கள் கடந்து செல்லும்போது தூசி படலங்கள் காற்றில் பறக்கின்றன. இதனால் மூச்சுத் திணறல் போன்ற சிரமங்களை எதிர்கொள்வதாகவும், சில நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயமும் இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
மேம்பாலம் முழுமையாகச் சீரமைக்கப்பட்ட பின் மட்டுமே பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்றும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















