நகராட்சி நிர்வாகப் பணி நியமனங்களில் திமுக அரசின் அதிரவைக்கும் ஊழல், இதனை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
அரசுப் பணி என்ற கனவுடன் இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இந்த செய்தி தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது.
அரசு வேலைகளுக்கு பெரிய அளவில் லஞ்சம் வாங்கி பணம் குவிக்கும் திமுகவினர், திறமையுள்ள ஏழை இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைப்பதையும் தடுத்துள்ளனர்.
தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை திமுக அரசு சிதைத்துள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின்
தலைமையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்க முடியாது.
அப்படி பெயரளவுக்கு வழக்கு பதிவு செய்தாலும் அது ஊழலை மூடி மறைக்கும் மோசடி நாடகமாகவே அரங்கேறும்.
தமிழகத்தை அதிர வைக்கும் இந்த பணி நியமன ஊழல் வழக்கைத், தமிழக காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே திமுக அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.
 
			 
                    















